top of page

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.

  • சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்த்தனர்.

Tourists   Hogenakkal
Tourists Hogenakkal

பென்னாகரம்:

  • பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் இன்று ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

  • தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்ந்து செல்வார்.

  • இதனிடையே ஒகேனக்கலுக்கு நேற்று 3,500 கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது இன்றும் அதே நிலை நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

  • இந்த நீர் வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

  • இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை விடப்பட்டதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கலில் குவிந்தனர்.

  • அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே கொட்டும் இயற்கை அருவிகளை ரசித்தபடி காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

  • பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றும் காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர்.

  • சுற்றுலா பயணிகளின வருகை அதிகரிப்பால், மீன் கடைகள், ஓட்டல்கள், பரிசல் நிலையம், கடைவீதி என ஒகேனக்கல் முழுவதும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

  • இதேபோல் ஒகேனக்கல் பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் சுங்கச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. 

Comments


bottom of page