தடை நீக்கப்பட்டதால் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு புறப்பட்ட மண்டபம் மீனவர்கள்
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
மீன்பிடி தடை நீக்கப்பட்டு இன்று முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

மண்டபம்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணாக தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசப்படும். எனவே கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்காற்று அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
இதன் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் மண்டபம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு வடதிசை நோக்கி நகர்ந்ததால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்றின் வேகம் தணிந்தது. நேற்று மாலை முதல் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து மீன்பிடி தடை நீக்கப்பட்டு இன்று முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக படகுகள், மீனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை மூலம் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மண்டபம் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.






Comments