முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க தனியார் மருத்துவ கல்லூரி மறுப்பு- அரசு செயலர் எச்சரிக்கை
- tamil public
- Dec 2, 2024
- 1 min read
அரசு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள எம்.டி., எம்.எஸ்., மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் கடந்த 26-ந் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்தது.
அரசு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது அதுபோல் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஓதுக்கீடாக 64 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
இம்மாணவர்கள் நவ. 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை சீட் கிடைத்த கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டனர்.
அதன்படி தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்த 64 மாணவர்கள் சேர முற்பட்டபோது, அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை சேர்க்க மறுத்துவிட்டது.
எங்களுடைய கல்லுாரி சிறுபான்மையினர் கல்லூரி என்பதால் 50 சதவீதம் தர விருப்பம் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் எனவே இம்மாணவர்களை சேர்க்க முடியாது என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இதனால் கொந்தளிப்பு அடைந்த மாணவர்கள், பெற்றோர் சங்கங்களுடன் சென்டாக் வளாகத்தில் திரண்டனர். அவர்களிடம் சென்டாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறுபான்மை கல்லூரி வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை தான். ஆனால் மாணவர் சேர்க்கைக்கு எந்த இடைக்கால தடையும் இல்லை. இதனால் தான் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து, சுகாதார துறை செயலர் முத்தம்மாவிடம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று முறையிட்டனர்.
கவுன்சிலிங் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அரசு செயலர் முத்தம்மா எச்சரிக்கை விடுத்தார். அதையேற்று மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
#Medical Study






Comments