மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- முத்தரசன்
- tamil public
- Dec 11, 2024
- 1 min read
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
மழை, புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு முழுவதும் விலைவாசி உயர்வு பல மடங்கு அதிகரித்து உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
டங்ஸ்டன் நிறுவனம் தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி அளிக்காத நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.
மழை, புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. எக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் அதிகம் உள்ள குடிசை வீடுகளை முற்றிலும் நீக்கி கான்கிரீட் வீடுகளாக மாற்றி, குடிசைகள் இல்லாத மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட புயல் நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி தேவை என மத்திய அரசின் உயர்மட்ட குழுவிடம் கடிதம் கொடுத்து உள்ளார். இதற்கு உரிய மதிப்பளித்து அந்த நிதியை அனுப்பி வைக்க வேண்டும்.
#Crop Damage #Muthurasan #Rain






Comments