விடுமுறையிலும் பொதுச்சேவை: தனி ஆளாக களம் இறங்கிய பெண் போலீஸ்- பொதுமக்கள் பாராட்டு
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது.

நாகர்கோவில்:
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் கேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகை கொண்டாட்டத்திற்காக இன்று (செவ்வாய்க்கிழ மை) குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது. வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது. அப்போது மின்னலாக ஒரு பெண் சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இறங்கினார்.
இங்கும் அங்கும் கைகளை காட்டி வாகனங்களை நிறுத்தியும், போகச்செய்தும் சிறிது நேரத்தில் நெருக்கடி நிலையை சீர்படுத்திய அவரை அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். ஆண்களும் பெண்களும் வாகனங்களை விட்டு இறங்காமல் காத்து நின்ற போது, வேகமாக செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடியை தீர்த்தவர் குறித்து விசாரித்த போது, அவர் பெண் போலீஸ் பவானி என தெரிய வந்தது.
ஆனால் அவர் பணிபுரிவது நம் மாவட்டத்தில் அல்ல. கோவையில் பணியாற்றும் அவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது வேர்கிளம்பி வந்த அவர், ஸ்தம்பித்து நின்ற வாகனங்களை பார்த்து உடனடியாக களம் இறங்கி நிலைமையை சமாளித்துள்ளார். விடுமுறையிலும் பொதுச்சேவை புரிந்த அவரது செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலானதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
#Public service #Female police #Traffic crisis #Tamilpublicnews






Comments