153/2 கடைசி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 2-ம் நாள் முடிவில் 164/5
- tamil public
- Dec 27, 2024
- 2 min read
ஒரு கட்டத்தில் இந்தியா 153/2 என்ற நிலையில் இருந்தது.
அடுத்த 11 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா, 3 விக்கெட்டுகளை இழந்தது.

மெல்போர்ன்:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சாம் கான்ஸ்டாஸ் 60 ரன், கவாஜா 57 ரன், லபுசேன் 70 ரன், அலெக்ஸ் கேரி 31 ரன், மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் தொடங்கியது. ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து ஜெய்ஸ்வால் - கோலி ஜோடி நிதானமாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. 2-வது நாள் ஆட்டம் முடிய கடைசி அரை மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் தேவையில்லாமல் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவர் 82 ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 153/2 என்ற நிலையில் இருந்தது. 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
#AUS VS IND #Tamilpublicnews






Comments