3வது டி20 போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

செயிண்ட் வின்செண்ட்:
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
இதையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. ஜேகர் அலி 72 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் ஓரளவு தாக்குப்பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 16.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 80 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வங்கதேசம் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ஜேகர் அலிக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கும் வழங்கப்பட்டது.
#WI VS BAN #Mehidy hasan #Tamilpublicnews
Comments