3வது போட்டியில் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 217 ரன்கள் குவித்தது.
மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நவி மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களைக் குவித்தது. ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார். நடப்பு டி20 தொடரில் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார்.
ஸ்மிருதி மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னும், ராகவி பிஸ்ட் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி களமிறங்கியது. அந்த அணியின் சினேலி ஹென்றி 16 பந்தில் 43 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
#INDW VS WIW #Womens cricket #Tamilpublicnews
Comments