7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
- tamil public
- Dec 14, 2024
- 1 min read

மண்டபம்:
தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதனால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தடை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து சென்றதால் 7 நாட்களுக்கு பின் கடல் காற்று குறைந்து இயல்பு நிலைக்கு மாறியது. நேற்று சூறாவளி காற்றின் வேகம் தணிந்ததால் இன்று பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க மீன்துறை அனுமதி அளித்தது.
அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் இன்று அதிகாலை காலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். 7 நாட்களுக்கு பின்பு இன்று (14-ந் தேதி) கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.
#Rameshwaram fisherman #Tamilpublicnews






Comments