top of page

அரசியலை மாற்றும் வலிமை நடுத்தர மக்களுக்கு உண்டு- அண்ணாமலை

  • வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள்.

  • அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும்.

Annamalai Voice Of Coimbatore Conference
Annamalai Voice Of Coimbatore Conference

கோவை:

  • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 3 மாத படிப்பு முடிந்து லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து மாலையில் அவர் விமானம் மூலம் கோவை வந்தார். சென்னை மற்றும் கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • லண்டனில் இருந்து திரும்பியதும் முதல் நிகழ்ச்சியாக கோவையில் நடந்த வாய்ஸ் ஆப் கோவை மாநாட்டில் பங்கேற்று பேசினார். மாநாட்டில் அவர் சர்வதேச மற்றும் இந்திய அரசியல் பார்வை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அண்ணாமலை பேசியதாவது:-

  • நல்லதை நல்லது என்று சொல்லவும், கெட்டதை கெட்டது என்று சொல்லி சுட்டிக்காட்டவும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு தொடங்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் கூட மக்களின் குரலாக இருக்க வேண்டும்.

  • தன்னார்வ அமைப்பு கள் உங்கள் குரலாக ஒலிக்கும்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. உலக அரசியல் மிக முக்கியம். ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வு, நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • அமெரிக்காவில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்றவுடன் சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள 1.20 கோடி பேரை வெளியேற்றப் போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இதுவும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • பா.ஜ.க. சார்பில் 2020 அக்டோபர் முதல் அசாம் மாநிலத்தில் 37 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.830 தரப்படுகிறது. தி.மு.க. மகளிர் உதவித்தொகை தரும் முன்பே அசாமில் கொடுக்க தொடங்கி விட்டோம்.

  • இந்த ஆண்டு மார்ச் முதல் சத்தீஸ்கரில் 70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1000, மகாராஷ்டிராவில் ஜூலை முதல் 1.70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1500, ஒடிசாவில் செப்டம்பர் முதல் 80 லட்சம் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

  • பிரதமர் மோடி ஆட்சியில் 40 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிகடன், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

  • மோடி அரசு, உள்கட்டமைப்புக்கு ரூ.48 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. எல்லா மக்களுக்கும் எல்லாவித சலுகைகளும் வர வேண்டும் என நினைக்கும் அரசாக பா.ஜ.க. உள்ளது.

  • ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை என்றாலும் அனைத்தும் இலவசம் என்கிறார் ராகுல்காந்தி. அப்படியென்றால் நாடு எப்படி முன்னேறும். அறிவு பூர்வ மக்கள் இருக்கும் இதுபோன்ற இடங்களில் அரசியல் சாராதவர்கள் பேசும் கருத்துகள், அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளாக மாறும் வாய்ப்புள்ளது.

  • மக்களுக்கு பயன்படும் அரசியல் பேச வேண்டும். அதை பேசுவதில்லை. ஆக்கப்பூர்வ முறையில் மக்களிடம் கருத்து கேட்கும் அரசு தமிழகத்தில் இல்லை.

  • கோவை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. வெட்கிரைண்டர் உற்பத்தியில் தலைநகராக கோவை இருந்தது. தற்போது அது அகமதாபாத் நகராக மாறி விட்டது. கோவையின் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லை. விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் தர இழுத்தடிக்கின்றனர். அறிவாளிகளை அடிமை வாதிகளாக மாற்றும் அரசியல் நிலவரம் இங்கு இருக்கிறது.

  • லண்டன் அருங்காட்சியகத்தில் 67 லட்சம் பொருட்கள் உள்ளன. அதில் டைனோசர் எலும்பு முதல் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பொக்கிஷங்கள் வரை உள்ளன. நம் பாரம்பரிய, கலாசாரம் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. கலாசாரத்தை மீட்டெடுக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • உலகம் முழுவதும் நமது கலாசாரம் சார்ந்த வேர்களை கொண்டுவர வேண்டும். அதை பிரதமர் மோடி மீட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இருந்து 640 புராதன பொருட்களை மோடி அரசு மீட்டுள்ளது.

  • அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க இளைஞர்கள் சபதம் ஏற்க வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இருந்து இயற்கையோடு இணைந்து வாழும்போது தான் அறிவு சார்ந்த விஷயங்கள் நடக்கும். நடுத்தர மக்கள் அறிவுசார்ந்த விஷயங்களை பேச வேண்டும். தமிழக அரசியலை மாற்றும் வலிமை நடுத்தர மக்களின் குரலுக்கு உண்டு.

  • கேள்வி கேட்டால் உங்களிடம் வர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள். அவர்கள் தானாக உங்களிடம் வருவார்கள்.

    #Annamalai #Voice Of Coimbatore Conference


Comments


bottom of page