கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்? - இதோ உங்களுக்கான எச்சரிக்கை பதிவு!
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
பொதுமக்கள் அதிக கட்டணங்களுக்கு ஆளாக நேரிடும்.
கிரெடிட் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்

கிரெடிட் கார்டு கடன்களுக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி இருப்பதால், கிரெடிட் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரெடிட் கார்டுகளுக்கான கடனை குறித்த காலக்கெடுவுக்குள் கட்டத் தவறும் பட்சத்தில் கடன்களுக்கான வட்டி உச்சவரம்பு ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி தேசிய நுகர்வோர் நிவர்த்தி ஆணையம் (NCDRC) உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வங்கி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், தேசிய நுகர்வோர் நிவர்த்தி ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவில் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான 30 சதவீத வட்டி உச்சவரம்பை வங்கிகள் மீறுவதை அனுமதிக்கிறது. இதனால், பொதுமக்கள் அதிக கட்டணங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும், அதிக சுமை, அதிக வட்டி விகிதம் எனும் தீய சுழற்சியில் இருந்து கிரெடிட் கார்டுதாரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, செலவுப் பழக்கம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
நிர்வாகச் செலவு, கடனை திரும்பப் பெறுவதில் உள்ள ஆபத்து, கிரெடிட் கார்டின் பாதுகாப்பற்ற தன்மை ஆகியவை காரணமாக, வங்கிகள் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான வட்டியை வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகளை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான யுக்திகளை உருவாக்குதல், வட்டி விகிதங்கள் தொடர்பான விதிமுறைகளைப் புரிந்துகொள்ளுதல், அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஆகிய யுக்திகளை கிரெடிட் கார்டு பயனர்கள் கையாள்வது முக்கியம்.
#National consumer commission #Credit card #Tamilpublicnews






Comments