கிருஷ்ணகிரி அருகே நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ளது ஜாகீர் வெங்கடாபுரம். இதன் அருகில் உள்ள குல்நகர், அதியமான்நகர், பாஞ்சாலியூர், கொண்டே பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அதியமான் நகரில் உள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறியதாவது:
கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும், சத்தம் எழுப்பியவாறு சிறுத்தை தேடும் பணி நடந்தது. காலையில் சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சிறுத்தை யாரும் கண்ணிலும் தென்படவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் பதிவாகவில்லை. பட்டாசு வெடித்தால், அங்கிருந்து இடம் பெயர்ந்து இருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விழிப்புடன் இருந்து, சிறுத்தை நடமாட்டம் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கிருஷ்ணகிரி முழுவதும் தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அப்பகுதியிலும், சமூக வலைதளத்திலும் வேகமாக பரவியது. மேலும், ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவிகள் பள்ளி நேரத்தில் வகுப்பறைவிட்டு வெளியே செல்வதற்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். காலை, மாலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர ஏதுவாக உரிய நடவடிக்கைகளை பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
#Forest Department #Leopard #Krishnagiri #Tamilpublicnews






Comments