top of page

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடரும் மழை- பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின

  • பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

  • கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

Ramanathapuram    Rain
Ramanathapuram Rain

ராமநாதபுரம்:

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்தது. 3-வது நாளாக இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதபுரம் நகர், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. விடுமுறை எதுவும் அறிவிக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

  • குறிப்பாக முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதியில் விவசாய நிலங்களில் மழை புகுந்தது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

  • ராமநாதபுரம்-15.20, திருவாடானை-9, பரமக்குடி-30, கமுதி-19, கடலாடி-41.80, வாலிநோக்கம்-18.80, தொண்டி-3.40, முதுகுளத்தூர்-6.60. மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 175.10 மி.மீட்டர் ஆகும்.

  • விருதுநகர் மாவட்டத்திலும் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது.

  • விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி ரோடு பாவாலி ரோடு பாத்திமா நகர் மற்றும் எம்ஜிஆர் சிலை எதிரில் அருப்புக்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

  • விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது சராசரியாக 68.53 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 114 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

  • அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

  • விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ம.ரெட்டியபட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் கண்மாய் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கரைபுரண்டு ஓடிய மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளமாக சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

  • தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

  • மேலும் திருச்சுழி அருகே கொப்புசித்தம்பட்டி அருந்ததியர் தெருவில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் பெரிய கண்மாய் நிறைந்து மறுகாலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • மேலும் மறவர் பெருங்குடி உப்பு ஓடை, திருச்சுழி குண்டாறு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மறவர் பெருங்குடி பகுதியில் உள்ள அரசுபள்ளியின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் பள்ளி வளாகமே வெள்ள காடாக காட்சியளித்தது.

  • மேலும் அப்பகுதியில் விவசாயம் செய்துள்ள நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • சிவகங்கை மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

  • தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  • சிவகங்கை அருகே பெரியகோட்டை கிராமத் தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளக்காடாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் 300 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.

    #Ramanathapuram #Rain #Tamilpublicnews

Comments


bottom of page