செஸ் சாம்பியன் குகேஷ் பரிசுத்தொகைக்கு வரிவிலக்கு? தப்பும் ரூ.4 கோடி - சட்டம் சொல்வது என்ன?
- tamil public
- Dec 21, 2024
- 2 min read
இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி
பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி.
போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூ.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.
அந்த வகையில், குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டது.
இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார். இந்த முழு தொகை குகேஷுக்கு அப்படியே போகாது என்றும் வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(17A) இன் கீழ், மத்திய அரசு, மாநில அரசு வழங்கியிருந்தால், பொது நலன் கருதி விருது அல்லது வெகுமதியாக, பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கப்படுவதற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், குகேஷுக்கு வழங்கப்பட்ட விருதை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) வழங்கியுள்ளது, இது செஸ் விளையாட்டிற்கான உலகளாவிய நிர்வாக அமைப்பாகும், இது இந்திய மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக தகுதி பெறவில்லை.
எனவே, பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது, ஏனெனில் இந்த ஏற்பாட்டின் பயன் இந்திய அரசுஅதிகாரிகள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்கு மட்டுமே.
இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதினார்.
மேலும் சில அரசியல் தலைவர்களும் இணைய வாசிகளும் இதுகுறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் குகேஷின் பரிசுத்தொகையில் ரூ. 4 கோடி வரி பிடித்தம் செய்யாமல் விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய அமைச்சக அதிகாரி ஒருவர், நாட்டிற்கு குகேஷ் கொண்டு வந்த மகத்தான பெருமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
அவரது வெற்றிகளுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிப்பது மிகவும் பொருத்தமானது, மேலும் அவர் தனது எதிர்காலத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தவும், அவரது திறனை மேம்படுத்தவும் அது அனுமதிக்கும் என்று கூறியிருக்கிறார்.
#World chess champhionship #Gukesh #Price money #Tamilpublicnews






Comments