ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரைஇறுதியில் இந்தியா - மலேசியா இன்று மோதல்
- tamil public
- Dec 3, 2024
- 1 min read
‘ஏ’ பிரிவில் இந்தியா முதலிடமும், ஜப்பான் 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
‘பி’ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின.

மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியா (6 புள்ளி), தாய்லாந்து (3 புள்ளி), சீன தைபே (0) முறையே 3 முதல் 5 இடங்கள் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.
'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின. வங்காளதேசம் (5 புள்ளி) 3-வது இடமும், சீனா (4 புள்ளி) 4-வது இடமும், ஓமன் (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை கோட்டை விட்டன.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) அரைஇறுதி ஆட்டம் அரங்கேறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவுடன் மல்லுக்கட்டுகிறது.
லீககில் தங்களது 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற (தாய்லாந்து, ஜப்பான், சீன தைபே, தென்கொரியா) இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டுள்ள மலேசிய அணி இறுதிப்போட்டியை எட்ட கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. முன்னதாக நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் (மாலை 4.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
Comments