டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு- சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும்.

மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்த நிலையில் அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர் தலத்தை அழித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (13-ந்தேதி) நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
#Arittapatti #Tungsten Mining #Seeman






Comments