நிதி நிலைமை சரியில்ல 2 மாதங்கள் பொறுங்கள்.. பெண்களுக்கு ரூ.1000 தருகிற ஆட்சி தி.மு.க. தான்- தா.மோ. அன்பரசன்
- tamil public
- Dec 11, 2024
- 2 min read
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

கூடுவாஞ்சேரி:
மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களும் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுவதாக புகார்கள் கூறப்பட்டது.
மேலும், பலர் ஏழ்மை நிலையில் இருந்தும் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி வந்தனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது முதலே, குடும்ப தலைவிகளில் யார் யாருக்கு, எதன் அடிப்படையில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதில் தொடங்கி அதற்கு என்னென்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்பது வரை பல்வேறு குழப்ப நிலை நீடித்து வந்தது.
பிறகு, உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும், பலர் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் இந்த தகவல் வெளியானது. தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இவ்வாறு உயிரிழந்த பெண்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்னும் மகளிர் உரிமை தொகை வராத ஒரு சில பேருக்கு மட்டும் 2 மாதங்களில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின் பேசிய அவர்,
"என்ன பண்ணலை நாங்க. தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை 90 சதவீதம் நிறைவேற்றி மக்களின் பேரன்பை பெற்றிருக்குற ஒரே தலைவர் தளபதி தான். தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி."
"இன்னும் ஒரு சில பேருக்கு மகளிர் உரிமை தொகை வந்திருக்காது. இப்போ சொல்றேன்... இன்னும் 2 மாதங்கள் பொறுங்கள்.. இப்போ நிதிநிலை சரியில்ல. அதை சரி பண்ணிட்டு யார் யாருக்கெல்லாம் உண்மையிலேயே கஷ்டப்படுற பெண்களுக்கு வரலையோ அந்த ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி," என்றார்.
அமைச்சர் தற்போது வாக்குறுதி அளித்துள்ள நிலையில் விடுப்பட்ட மற்றும் உண்மையில் கஷ்டப்படுகிற பெண்களுக்கு மாதந்தோரும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments