பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரைஇறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்
- tamil public
- Dec 14, 2024
- 1 min read
முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

மஸ்கட்:
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடந்த அரைஇறுதியில் இந்திய அணி (1-0) ஜப்பானை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் கால் பதிக்கும்.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய ஜப்பான் அணி முயற்சிக்கும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஹாக்கி இந்தியா செயலியில் காணலாம்.
#Womens junior asia cup hockey #India #Japan #Tamilpublicnews
Comments