புதுச்சேரி பகுதியில் தொடர் மழையால் பல ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி வீணாகும் அவலம்
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
தொடர் மழையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை தொடர் மழையின் காரணமாக பயிரிட முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.

புதுச்சேரி:
தொடர்மழையின் காரணமாக விடூர் அணை திறக்கப்பட்டதால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புதுச்சேரி கூனிச்சம்பட்டு-மணலிப்பட்டு இடையேயான படுகை அணை, செட்டிப்பட்டு படுகை அணை, கைக்கிலப் பட்டு படுகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இரு கரையினையும் தொட்ட வாறு மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சென்ற மழையின் போது பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் மழை விட்டதால் சிலர் அறுவடை செய்ய தயாராக இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் மழை பெய்வதால் நெல் பயிர்கள் முழுவதும் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாக கார்த்திகை மாதத்தில் நடப்படும் உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை தொடர் மழையின் காரணமாக பயிரிட முடியாமல் விவசாயிகள் உள்ளனர். கார்த்திகை மாதம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பட்டம் தவறி பயிர் இட்டால் விளைச்சல் கிடைக்காது என்பதால் பயிரிட முடியாமலும் சில விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.






Comments