பழனி கோவில் தேவஸ்தானத்தில் 296 காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்
- tamil public
- Jan 9
- 1 min read
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி:
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
இதனால் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி பழனி கோவில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டது.
இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவி மின் பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி ஜனவரி 8-ந் தேதி என அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். நேற்று மாலை வரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் இந்த பணியிடங்களுக்காக வரப்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் அரசு வேலை கனவில் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் அளித்தனர்.
விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட உள்ளது. வெளிப்படையான முறையில் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Palani temple #Application #Tamilpublicnews






Comments