மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 87 சதவீத மின் உற்பத்தி பாதிப்பு
- tamil public
- Dec 22, 2024
- 2 min read
எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 என 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் பிரிவின் 3-வது அலகில் கடந்த 19-ந்தேதி மாலை பங்கர் டாப் எனப்படும் நிலக்கரி சேமிப்பு தொட்டி திடீரென உடைந்து விழுந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 42 மீட்டர் உயரத்தில் 3-வது தளத்தில் இருந்த 165 டன் எடைகொண்ட பங்கர் டாப் 500 டன் நிலக்கரியுடன் விழுந்ததால் 2-ம் தளத்திலும், முதல் தளத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
பங்கர் டாப் வழுவிழந்து விழுந்ததா?அல்லது சதி வேலை காரணமாக விழுந்ததா? என்பது இதுவரை கண்டுபிடிக்க ப்படவில்லை. இந்த பகுதியில் எப்போதும் தொழிலாளர்களும், கண்காணிப்பாளர்களும் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். விபத்து நடந்தபோது மாலையில் தேநீருக்கான நேரம் என்பதால் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே பணி யில் இருந்தனர். இதனால் தொழிலாளர்கள் உயிரிழ ப்பும், காயமும் குறைந்து ள்ளது.
இதனால் 3-வது அலகில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது.
3-வது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளன. இதன் காரணமாக 4-வது அலகிலும் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் அலகில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.
இந்த நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தின் '2-வது பிரிவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொதிகலன் டியூப் வெடித்ததன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்த பிறகு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மீண்டும் 2-வது பிரிவில் நேற்று காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
2 அனல் மின் நிலையங்களின் மொத்த மின்உற்பத்தி திறன் 1,440 மெகாவாட் என்ற நிலையில், தற்போது 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 87 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
#Metur thermal power plant #Power generation damage #Tamilpubliocnews






Comments