அதிமேதாவிகளாக, தற்குறிகளாக சிலர் விமர்சனம் விஜயை கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு
- tamil public
- Dec 7, 2024
- 1 min read
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தருகின்ற ஆட்சி.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும்.

சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே 'மைனஸ்' ஆக்கிவிடுவார்கள் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் தி.மு.க. பற்றி விஜய் விமர்சித்து பேசியதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
தமிழகத்தில் பெண்களுக்கான நலத்திட்டங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்ற முதலமைச்சரை பார்த்து இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற ஒரு கூட்டம் இருக்கிறது.
பாலியல் வன்முறை என்றால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்கை பதிவு செய்வதோடு விட்டுவிடாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் தவறு இழைத்தவனை தண்டனைக்கு உள்ளாக்குகின்ற நீதி தேவதையின் ஆட்சி தான் தமிழக முதலமைச்சரின் ஆட்சி.
தமிழகத்தின் அரசியலை தெரியாமல் அறியாமையில் இருக்கின்ற ஒரு சிலர் கூறுகின்ற கூற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நிச்சயம் 2026-ம் ஆண்டு 200 என்பதல்ல, 234 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றும்.
இந்த ஆட்சியை பொருத்த அளவில் ஒரு சுதந்திரமான ஆட்சி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தருகின்ற ஆட்சி. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களுடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் யாராவது குறைவு ஏற்படும் என்று நினைத்தால் அவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும். தி.மு.க. ஆட்சியில் பயனாளிகளின் வாக்குகளை வைத்து எடை போடுவதில்லை.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
எங்களது நிலைப்பாடு 200 இடங்கள் அல்ல. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் இதுபோல அவதூறுகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் 80 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. தொண்டர்கள் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பார்கள்.
2026-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றும் வரை எங்களுடைய பயணம், எங்களுடைய வேகம் குறையாது.






Comments