ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா- 100 ஆடுகளை பலியிட்டு 10 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட கறி விருந்து
- tamil public
- Jan 4
- 1 min read
நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்னதானம் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.

திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அனுப்பப்பட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் கரும்பாறை முத்தையா சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவு திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் விழாவிற்காக பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கருப்பு ஆடுகள் மட்டுமே முத்தையாசாமி கோவிலுக்கு வழங்குவார்கள். பக்தர்கள் கோவிலில் விட்டுச் செல்லும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது கருப்பசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை பொதுமக்கள், விவசாயிகள் யாரும் விரட்டமாட்டார்கள்.
விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கிராமப்புறங்களில் சுற்றி திரியும் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து சுவாமிக்கு பலியிடப்பட்டு அசைவ அன்னதான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. சமைக்கப்பட்ட சாதத்தை ஒரு இடத்தில் மலை போல் குவித்து வைத்து ஆட்டு இறைச்சியால் அசைவ குழம்பு சாமிக்கு படைத்து பூஜை செய்தனர். அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த கறி விருந்தில் கரடிக்கல், அனுப்பப்பட்டி, மட்டப்பாறை, சொரிக்காம் பட்டி, பெருமாள் கோவில் பட்டி, செக்கானூரணி, மேல உரப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இலை போட்டு கறிவிருந்து பரிமாறப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்னதானம் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலிக்கு சாமி தரிசனத்திற்கு வருவார்கள்.
இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவு திருவிழாவில் ஜாதி மத பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டனர்.
#Temple festival #Tamilpublicnews
Comments