இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை
- tamil public
- Dec 11, 2024
- 2 min read
டிசம்பர் 13, 16, 17-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நெருங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் 5 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (12-ந்தேதி) தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 13, 16, 17-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 3 நாட்களும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், கேரள கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் எதுவும் தற்போது இல்லை. தமிழகத்தில் கனமழை பெய்யும். ஆனால் பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு காற்று, வெள்ள பாதிப்பு ஏற்படாது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை இயல்பாக 39.4 செ.மீ. பெய்யும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை 45 செ.மீ. பெய்துள்ளது. இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.
#Chennai Rain #TN Rain #Northeast Monsoon #IMD
Comments