இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் அரசு நிலத்தில் குடியேற முயன்ற பொதுமக்கள்
- tamil public
- Dec 24, 2024
- 1 min read

சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணாநகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்திருந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்காததால் அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் தொப்பம்பாளையம், கணபதி நகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க பொருட்களுடன் நேற்று திரண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பவானிசாகர் போலீசார் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து குச்சிகளை நடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன், சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.
சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று எப்போது கேட்டாலும் இடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்று கூறி அனுப்பிவிடுகின்றனர். உடனடியாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
விண்ணப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் நிலத்தை அளவீடு செய்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளிக்கவே பொதுமக்கள் அதனை ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
#Sathyamangalam #Free house lease #Public demand #Tamilpublicnews






Comments