top of page

கனமழை- வெள்ளப்பெருக்கால் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

  • மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Kodaikannal    Heavy rain
Kodaikannal Heavy rain

கொடைக்கானல்:

  • கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

  • இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

  • கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.

  • மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

  • எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.

  • பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

  • இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

  • இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

  • இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

  • அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments


bottom of page