ஜனவரி 6-ந்தேதி தமிழக சட்டசபை- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- tamil public
- Dec 20, 2024
- 2 min read
கடந்த முறை போல் அல்லாமல் கவர்னர் தனது உரையை முழுவதுமாக வாசிப்பார் என நம்புவோம்.
எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய அந்தஸ்து மரியாதை வழங்கப்பட்டு வருகிறது என அப்பாவு கூறினார்.

சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டின் குளிர்கால கூட்டம் என்பதால் குறுகிய நாட்களே கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தொடரில் மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமத்தை உடனே ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர 19 சட்ட மசோதாக்களும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ந்தேதி கூட்டப்பட உள்ளது.
இது குறித்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விதி 174 (1) ன் கீழ் தமிழக சட்டமன்றத்தை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி கூட்டி உள்ளார்.
அன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 (1) ன் கீழ் உரை நிகழ்த்த உள்ளார்.
சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
கேள்வி:-ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படுமா?
பதில்:- அதை நீங்கள் முதலமைச்சரிடம்தான் சொல்ல வேண்டும். சபாநாயகரிடம் இதுபற்றி கேட்க முடியுமா?
சட்டசபையில் முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தால் அந்த தீர்மானத்தை விவாதத்துக்கு வைத்து நிறைவேற்றுவதற்கு சட்டமன்றம் தயாராக இருக்கிறது.
கேள்வி:- கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது கவர்னர் ஆர்.என்.ரவி உரையில் முரண்பாடு இருந்தது. இந்த முறையும் முரண்பாடு இருந்தால்...?
பதில்:- முரண்பாடு நாங்கள் செய்தது போல கேட்கிறீர்கள்? தமிழக கவர்னர் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் அப்போது வாசித்தார். அவ்வளவுதான். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம்.
கேள்வி:- சட்டசபை கூட்டத் தொடர் 100 நாட்கள் நடத்துவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் சுருங்கி கொண்டே வருகிறதே? கடந்த கூட்டத்தொடர் கூட 2 நாட்கள்தான் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- இதுபற்றி சட்டசபையிலே பதில் சொல்லி உள்ளேன். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலத்தில் குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் தான் நடத்தி இருக்கிறார்கள். எல்லோருமே அதற்கு காரணம். கூடுதல் செலவினத்துக்கான துணை பட்ஜெட்தான் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதில் பேசுவதற்கு பெரிய 'சப்ஜெக்ட்' கிடையாது.
#TN Assembly #Speaker appavu #Tamilpublicnews






Comments