பாலமேடு ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
- tamil public
- Jan 3
- 1 min read
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.

மதுரை:
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் போட்டி வரும் ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கிறது. இதனையடுத்து வரும் 15-ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடந்தது. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முகூர்த்த கால் நட்டு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளரிடம் கூறுகையில்,
அலங்காநல்லூர் அருகே கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் தனியார் ஏற்பாடு செய்யும் ஜல்லிக்கட்டு அல்லது கிரிக்கெட் போன்றவற்றை நடத்தலாம். தற்போது மாமதுரை அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு வழக்கம்போலவே வீரர்களும், காளை உரிமையாளர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவாகும் எண்ணிக்கை அடிப்படையில், காளைகள் அவிழ்க்கப்படும்.
இதுகுறித்த அறிவிப்பை கலெக்டர் விரைவில் வெளியிடுவார் என்றார்.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழு அறிவித்துள்ளது.
#Jallikattu bull #Minister murthi #Tamilpublicnews
Comments