பசுமை தீர்ப்பாயம் உத்தரவு எதிரொலி நெல்லையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது
- tamil public
- Dec 22, 2024
- 2 min read
மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது.
கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

நெல்லை:
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.
அதில் திருவனந்தபுரத்தில் உள்ள சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் சுத்தமல்லி பகுதிகளில் கொட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கேரள மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) என்பவரை கைது செய்தனர்.
இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த கழிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளா வில் இருந்து அந்த கழிவுகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று காலை தொடங்கியது.
இதற்காக கேரளாவில் இருந்து சப்-கலெக்டர் ஆல்பர்ட் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.
பின்னர் கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. மேலும் கழிவுகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட 16 லாரிகள் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டன.
இதில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், நாகர்கோவில் நாங்குநேரி வழியாக 8 கேரளா லாரிகளும், கோட்டயம், புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக 3 கேரளா லாரிகளும் என மொத்தம் 11 லாரிகள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் முன்னிலையில் நடுக்கல்லூர் அரசு பள்ளியில் வைத்து கேரள அதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்ஷி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அந்த லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை கேரளாவுக்கு செல்வதை உறுதி செய்ய தமிழக-கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
#Tirunelveli #Kerala #Medical waste #Green tribunal commitee #Tamilpublicnews






Comments