முல்லைப்பெரியாறு பராமரிப்பு பணி- கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு இறங்குதளம் வழியே கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர்.
அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.
இதனால் வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி கட்டுமான பொருளை எடுத்து செல்ல கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து வானங்களில் கட்டுமான பொருட்கள் எடுத்து செல்வதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
வல்லக்கடவு சோதனை சாவடி, தேக்கடி படகு இறங்குதளம் வழியே கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
#Mullaperiyar dam #Kerala Government






Comments